Guru

  •    > Details
  • விருச்சிகம்(குருபெயா்ச்சி)

    விருச்சிகம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்

    கலகலப்பான பேச்சாலும் சுறுசுறுப்பான செய்கையாலும் அனைவரின் மனத்திலும் இடம்பிடிப்பவர்கள் விருச்சிக ராசிக்காரர்கள். நட்சத்திர மண்டலத்தில் விசாகம் 4-ம் பாதம் முதல், அனுஷம், கேட்டை ஆகிய நட்சத்திரங்கள் விருச்சிக ராசியில் வரும். செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி எப்படிப்பட்ட பலன்களை வழங்கும் என்பதைக் காணலாம்.


    கடந்த ஆண்டு குருபகவானின் செவ்வாயின் மேஷ ராசியில் சஞ்சரித்தாலும் 6 ம் இடத்தில் மறைந்திருந்தார். எனவே வரவேண்டிய நன்மைகள் தடைப்பட்டன. சுபநிகழ்ச்சிகள் தள்ளிப்போயிருக்கும். இனி எல்லாம் கூடிவரும். திருமண வயதில் உள்ள இளைஞர்களுக்குத் திருமண வாய்ப்புகள் தேடிவரும். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணை மூலம் பணவரவுக்கு வாய்ப்புண்டு. பிள்ளைவரம் வேண்டி நீங்கள் பார்க்காத மருத்துவரே இல்லை, இனி அழகான வாரிசு பிறக்கும். வங்கிக்கடனுதவியுடன் சொந்த வீடு வாங்குவீர்கள். வெளிமாநில புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். இழந்த பதவியை மீண்டும் பெறுவீர்கள். சொத்துப் பிரச்னை தீரும்.

    குருபகவான் உங்கள் லாப வீட்டைப் பார்ப்பதால் தொட்ட காரியம் துலங்கும். மூத்த சகோதரரால் ஆதாயம் உண்டு. இளைய சகோதரர்களுடன் இருந்து வந்த மனத்தாங்கல் நீங்கும். விலையுயர்ந்த தங்க ஆபரணம் வாங்குவீர்கள். வெளிநாட்டில் இருப்பவர்கள் உதவுவார்கள். இனி கோபப்படாமல் பேசுவீர்கள். உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டை குரு பார்ப்பதால் பதவி பட்டம் பெறுவீர்கள். சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள். கோயில் திருவிழாக்களில் மரியாதை கிடைக்கும். ஏமாற்றங்கள், தாழ்வுமனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவ முன்வருவார்கள். அரசியல்வாதிகள் தலைமைக்கு நெருக்கமாவார்கள். உங்கள் மீது எதிர்கட்சிக்காரர்கள் சுமத்திய வீண் பழியெல்லாம் விலகும். அண்டை அயலாருடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும்.


    குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

    1.5.24 முதல் 12.6.24 வரை உங்களின் ஜீவனாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரத்தில் குரு பயணிப்பதால் சாதித்துக் காட்டுவீர்கள். தடைப்பட்டுக் கொண்டிருந்த காரியங்களெல்லாம் முடிவுக்கு வரும். எதிலும் வெற்றி கிடைக்கும். புது வேலை வாய்ப்புகள் அமையும். அரசால் ஆதாயமடைவீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் சாதகமாக முடியும். தள்ளிப்போன கல்யாணம் கூடி வரும். வீடு, மனை வாங்க வங்கிக் கடனுதவி கிடைக்கும். வி.ஐ.பிகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள்.


    12.6.24 முதல் 19.8.24 வரை மற்றும் 2.12.24 முதல் 5.4.25 வரை உங்களின் பாக்கியாதிபதியான சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் குரு செல்வதால் பணவரவு அதிகரிக்கும். தந்தைக்கு மருத்துவச் செலவுகள் குறையும். தந்தை வழி உறவினர்களால் ஆதாயமுண்டு. நிரந்தர வருமானத்திற்கு வழி தேடுவீர்கள். விலையுயர்ந்த ஆடை, அணிகலன்கள் வாங்குவீர்கள்.  புது வாகனம் அமையும்.


    19.8.24 முதல் 2.12.24 வரை மற்றும் 5.4.25 முதல் 14.5.25 வரை   உங்கள் ராசிநாதனான செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் திடீர்யோகம் உண்டாகும். சொத்து வாங்குவீர்கள். ராஜ தந்திரத்தால் வெற்றியடைவீர்கள். பெரிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

    வியாபாரம் : முடங்கிக் கிடந்த நீங்கள் புத்துயிர் பெறுவீர்கள். உங்களின் தனித்தன்மை வெளிப்படும். ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வியாபாரத்தை விரிவுபடுத்த வங்கிக்கடனுதவி கிடைக்கும். புது வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். படித்த அனுபவமுள்ள வேலையாட்களை கூடுதலாக நியமிப்பீர்கள். ரியல் எஸ்டேட், உணவு விடுதி, வாகன உதிரி பாகங்களால் லாபமடைவீர்கள். கூட்டுத்தொழிலில் பிரச்னைகள் ஓயும். பங்குதாரர்கள் பணிந்து வருவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. புதிய ஏஜென்ஸி எடுப்பீர்கள். வராது என்றிருந்த பழைய பாக்கிகள் வந்துசேரும்.


    உத்தியோகம் : ஓடி ஒடி வேலை பார்த்தும் கெட்டப் பெயர்தானே கிடைத்தது... இனி அந்த நிலை மாறும். மேலதிகாரியின் சொந்த விஷயங்களில் தலையிடும் அளவிற்கு நெருக்கமாவீர்கள். பிப்ரவரி மாதத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களில் இருந்து நல்ல வாய்ப்புகளும் தேடி வரும். கணினித் துறையினர்கள் இழந்த சலுகையை மீண்டும் பெறுவார்கள். கலைஞர்களே! மறைந்து கிடந்த உங்கள் திறமையை வெளிக்கொண்டுவர நல்ல நிறுவனம் அமையும். அரசால் கௌரவிக்கப்படுவீர்கள்.

    இந்த குரு பெயர்ச்சி வருங்கால வாழ்விற்கு அடித்தளம் அமைத்துத் தருவதுடன் மனநிம்மதியையும் தருவதாக அமையும்.