Guru

  •    > Details
  • கன்னி(குருபெயா்ச்சி)

    கன்னி- குரு பெயர்ச்சிப் பலன்கள்

    உத்திரம் 2-ஆம் பாதம் முதல், அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் ஆகிய நட்சத்திரங்களைக் கொண்ட ராசி கன்னி ராசி. அமைதியாகப் பேசிக் காரியம் சாதிப்பவர்கள் இவர்கள்தான். ஆனால் தனக்கு நேர்ந்த அவமானங்களையே படிக்கட்டுகளாக்கி முன்னேறும் குணமும் இவர்களுடையது. அப்படிப்பட்ட கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி எப்படி அமையும் என்பதைக் காண்போம்.

    இதுவரை கன்னிராசிக்கு எட்டாம் வீட்டில் அமர்ந்து பலவிதமான இன்னல்களையும் கொடுத்துக்கொண்டிருந்த குருபகவான் தற்போது 9 -ம் இடத்தில் வந்து அமர்கிறார்.

    இனி தடைகள் விலகும். எதிர்த்தவர்களும் அடங்கிப்போவார்கள். துணிச்சலுடன் முடிவெடுப்பீர்கள். செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் அன்பும் மகிழ்ச்சியும் கூடும். அனைத்தையும் செய்துமுடிக்கும் ஆற்றல் பிறக்கும். சிலருக்குப் புதிய வேலை கிடைக்க வாய்ப்புண்டு. பயணங்களும் அதனால் ஆதாயமும் அமையும். எதிர்பார்த்த நற்செய்திகள் தேடிவரும். உங்கள் படைப்பாற்றலை மீட்டெடுப்பீர்கள். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள்.

    ராசிக்கு குருபார்வை கிடைப்பதால் மனதில் இருந்த பயம் நீங்கும். எதையும் சாதிக்கும் துணிச்சல் பிறக்கும். எதிரிகளின் தொல்லைகள் விலகும். பலவகையிலும் பணம் வரும். குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். தந்தை வழியில் பணவரவு உண்டு. தந்தையின் ஆரோக்கியமும் மேம்படும்.

    3 -ம் இடத்தை குருபகவான் பார்ப்பதால் காது சம்பந்தமான பிரச்னைகள் நீங்கும். நகைகள் வாங்கும் யோகம் வாய்க்கும். சகோதரர்களால் நன்மை உண்டாகும்.

    5 -ம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குருபகவானின் பார்வை படுவதால் பூர்விக சொத்துப் பிரச்னை தீரும். தந்தை வழி உறவினர்கள் உதவுவார்கள். மகன் அல்லது மகளின் கல்வி, திருமணம் தொடர்பான முயற்சிகள் சிறப்பாக நடைபெறும்.

    குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

    1.5.24 முதல் 12.6.24 வரை உங்கள் விரையாதிபதி சூரியனின் கார்த்திகை  நட்சத்திரத்தில் குரு பயணிப்பதால் சுபச் செலவுகள் அதிகரிக்கும். இடவசதியில்லாத வீட்டிலிருந்து நல்ல வீட்டிற்கு மாறுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். பிள்ளைகளை அவர்கள் விருப்பப்பட்ட பாடப்பிரிவில், நிறுவனத்தில் சேர்ப்பீர்கள். நெருங்கிய உறவினர்கள், நண்பர்களின் விஷேசங்களை முன்னின்று நடத்துவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள்.


    12.6.24 முதல் 19.8.24 வரை மற்றும் 2.12.24 முதல் 5.4.25 வரை உங்களின் லாபாதிபதி சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் குரு செல்வதால் திடீர் பணவரவு உண்டு. ஷேர் லாபம் தரும். மூத்த சகோதர வகையில் உதவிகள் உண்டு. சொத்துப் பிரச்னைகள் தீர்வுக்கு வரும். அடுத்தடுத்த விஷேசங்கள், உறவினர்கள் வருகையால் வீடு களைகட்டும். வாகனம் புதிதாக வாங்குவீர்கள். வீடு வாங்க, கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். சிலர் இருக்கும் வீட்டில் கூடுதல் அறை கட்டுவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். வழக்குகள் சாதகமாகும். ஆன்மிகத்தில் மனம் லயிக்கும்.


    19.8.24 முதல் 2.12.24 வரை மற்றும் 5.4.25 முதல் 14.5.25 வரை உங்களின் திருதிய அட்டமாதிபதியான செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் அடுத்தடுத்த பயணங்களால் அலைச்சல் இருக்கும்.  இளைய சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். சித்திரை நட்சத்திரக் காரர்களுக்கு உஷ்ணத்தால் உடல்நலக் குறைவும், சிறு விபத்தும் வந்து நீங்கும். அநாவசியமாகக் கோபப்பட்டு யாரிடமும் கெட்ட பெயர் எடுக்காதீர்கள். புதிதாக சொத்து வாங்குவீர்கள். புதிய முயற்சிகள் வெற்றியடையும்.
     
    வியாபாரம் : குரு பகவான் 3-ம் வீட்டைப் பார்ப்பதால் வியாபாரத்தில் இருந்து வந்த போராட்ட நிலை மாறும். பெரிய முதலீடுகளைப் போட்டுப் போட்டியாளர்களை திகைக்கச் செய்வீர்கள். தொல்லை கொடுத்த வேலையாட்கள் மாற்றிவிட்டு அனுபவமிகுந்தவர்களை பணியில் அமர்த்துவீர்கள். பழுதாகியிருந்த கடையை அழகாக்குவீர்கள். நவீன வசதிகளைப் புகுத்தி வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள். பழைய சரக்குகள் விற்றுத்தீரும். எலக்ட்ரிக்கல்ஸ், டிராவல்ஸ், கட்டட உதிரி பாகங்களால் ஆதாயமடைவீர்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களிடம் இருந்து வந்த கருத்துமோதல்கள்  நீங்கும்.
     
    உத்தியோகம் : உங்களைக் குறை சொல்லிக் கொண்டிருந்த உயரதிகாரி இனி உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கொடுப்பார். வெகுநாள்களாக எதிர்பார்த்த பதவியுயர்வு இனி தேடி வரும். சக ஊழியர்கள் உங்களை சண்டைக்காரர்களாகப் பார்த்தார்களே! இனி சிரித்துப் பேசுவார்கள். கணினித் துறையினர்களுக்கு அயல்நாட்டு வாய்ப்புகள் தேடி வரும். மார்ச், ஏப்ரல் மாதங்களில் புது சலுகைகள் கிடைக்கும். கலைஞர்களே! பழைய நிறுவனங்களில் இருந்து புதிய வாய்ப்புகள் வரும். கிசுகிசுக்கள் ஓயும். சம்பள பாக்கி கைக்கு வரும். சக கலைஞர்கள் உங்களிடம் நட்புறவாடுவார்கள்.

    இந்த குரு மாற்றம் அநாவசிய செலவுகளைக் குறைப்பதாகவும், எதிர்பார்ப்புகளில் வெற்றியை தருவதாகவும் அமையும்.